கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

எம்மைப்பற்றி
யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.

ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.

பலானையில் ஆடிச் செவ்வாய்

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலாம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.
தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி,தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்துமத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும்,வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.
விவாகமான பெண்கள் தம் கணவனின் (பிரச்சனை உள்ளவர்கள்) குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இவ் விரதத்தை இலங்கையில் உள்ளவர்கள் மற்றைய (வெள்ளிக்கழமை) விரதங்களைப் போன்று எண்ணெய் வைக்காது தோய்ந்து விரதம் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால்; இந்தியாவில் ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாத்திச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது.
"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. காரணம்;
செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Share this article :

Post a Comment

 
பலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
Copyright © 2014. kopay palanai kannakai amman kovil - All Rights Reserved