.jpg)
பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலாம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.
தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி,தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்துமத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும்,வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
.jpg)
விவாகமான பெண்கள் தம் கணவனின் (பிரச்சனை உள்ளவர்கள்) குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இவ் விரதத்தை இலங்கையில் உள்ளவர்கள் மற்றைய (வெள்ளிக்கழமை) விரதங்களைப் போன்று எண்ணெய் வைக்காது தோய்ந்து விரதம் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால்; இந்தியாவில் ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாத்திச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது.
"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. காரணம்;
.jpg)
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Post a Comment